சென்னை: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகின்றன. கடந்த மாதம் 18ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக். 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. வாக்குப் பதிவுகள் முடிந்ததும் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள், பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் ‘நயா காஷ்மீர்’ என்ற முழக்கத்துடன் தனது பிரசாரத்தை முன்னெடுத்தது பாஜக. ஆனால் அது ஜம்மு காஷ்மீர் மக்களிடம் எடுபடவில்லை என்றே தற்போதைய எக்சிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்த்தில் இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில், 46 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது.
அதேநேரம் பாஜக தனியாகவும், முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் தேர்தலைச் சந்தித்தன. இதனால் ஜம்மு காஷ்மீரில் மும்முனை போட்டி என்பது நிலவிவருகிறது. இந்நிலையில், People Pulse கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 33 - 35 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என தெரிவித்துள்ளது. அதேபோல், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 7 முதல் 11 இடங்களிலும், பாஜக 23 முதல் 27 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 முதல் 5 இடங்களிலும் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே - சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 45 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 25 முதல் 32 இடங்களையும், மெகபூபா முஃப்தியின் கட்சி 5 முதல் 9 இடங்களையும், மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வரையும் வெற்றி பெறக்கூடும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைப்பது சிக்கல் என்றே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆட்சியோ அல்லது தொங்கு சட்டசபையோ அமைய வாய்ப்புள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு அமைதி, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய பாஜக, நயா காஷ்மீர் என்ற முழக்கத்தை கையில் எடுத்தது. ஆனால், இது அக்கட்சிக்கு வாக்குகளாக மாறவில்லை என்பது எக்சிட் போல் முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளன.