தமிழ்நாடு முழுவதும் மார்ச் 29ல் திமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற " தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, “தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும்” என்றும்; அத்துடன் ‘மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது’ குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
Read More: திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து எப்போது? நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, “மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து 25.03.2025 அன்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை அன்று காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






