தமிழ்நாடு

திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து எப்போது? நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து எப்போது? நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகள் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் பெற்று பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், கல்வி கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த மாதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடனில், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.