ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் காசி அம்மாள் (70). இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், காசி அம்மாளின் மகன் குமார் (50) என்பவருக்கு தேவா(25) என்ற மகனும் நந்தினி (23) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தேவா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக காசி அம்மாள் தேவாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பேத்திக்கு சொத்து
இந்த நிலையில் பூர்வீக சொத்தாக உள்ள பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டினை காசி அம்மாள் கல்லூரியில் பயின்று வரும் தனது பேத்தியான நந்தினி பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தேவா இன்று காசி அம்மாள் வீட்டிற்கு சென்று பூர்வீக வீட்டினை தங்கை நந்தினி பெயருக்கு எழுதி வைத்திருப்பதை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Read more: டெண்டரில் பாரபட்சம்? போரட்டத்தை கையிலெடுக்கும் ஐ.என்.டி.யு.சி!
அப்போது ஆத்திரமடைந்த தேவா கீழே இருந்த கருங்கற்களை எடுத்து காசி அம்மாள் மீது வீசி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காசி அம்மாள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
போலீஸ் விசாரணை
மேலும் காசி அம்மாள் உயிரிழந்ததை அறிந்த தேவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திமிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Read more: நகைப்பறிப்பு சம்பவம்.. என்கவுண்டர் செய்தது எதற்காக? காவல் ஆணையர் அருண் விளக்கம்
கொலை சம்பவம் குறித்து திமிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற தேவாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பூர்வீக வீடான சொத்தை சகோதரி பெயருக்கு மாற்றிக் கொடுத்த பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது