தமிழ்நாடு

கதவை உடைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன? முழு தகவல்!

திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்

கதவை உடைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன? முழு தகவல்!
Youtuber Savukku Shankar
சினிமா தயாரிப்பாளர்களை மிரட்டியது மற்றும் அவதூறு பரப்பியது தொடர்பான புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை காவல்துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 8:30 மணி நேரம் போலீசார் காத்திருந்து, பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

புகாரின் பின்னணி மற்றும் அவதூறு குற்றச்சாட்டு

மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் மற்றும் அபிராமி வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்து, ஆயிஷா சாதிக் இயக்கிய "Red and Follow" என்ற திரைப்படம் தொடர்பான விவகாரத்தில் இந்தப் புகார் எழுந்துள்ளது. இந்தப் படம் தற்போது "RCB" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான மகேஷ் ரம்யா மற்றும் ஆயிஷா சாதிக் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தங்களது திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அஜய் வாண்டையார் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைப் பயன்படுத்தி, போதைப்பொருள் விற்பனை செய்த பணத்தில் திரைப்படம் எடுக்கப்பட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக வீடியோ வெளியிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர்

இந்த புகாரானது ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சவுக்கு சங்கருக்குச் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளித்து வந்தார்.

8 மணி நேர காத்திருப்பு

சவுக்கு சங்கர் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடியில் உள்ள தனது தோழியின் வீட்டில் இருப்பதாக அறிந்த போலீசார், இன்று காலை 5:30 மணியளவில் அங்கு சென்றனர். போலீசார் கைது செய்ய வந்திருப்பதை அறிந்த சவுக்கு சங்கர், வீட்டின் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். தனது வழக்கறிஞர் வரும் வரை கதவைத் திறக்க இயலாது எனக் கூறி, சமூக வலைதளங்களில் இதுகுறித்துப் பதிவிட்டு வந்தார்.

கதவை உடைத்து கைது

போலீசார் கதவைத் திறக்குமாறு பலமுறை கூறியும் அவர் திறக்காததால், வேறு வழியின்றித் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனத்தோடு வந்த தீயணைப்புத் துறையினர் மதியம் 1:30 மணி அளவில் வீட்டின் கதவை உடைத்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்ற போலீசார், சவுக்கு சங்கரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, வீட்டில் இருந்த மோடம் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.