Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு.. பிரபலங்கள் நேரில் அஞ்சலி

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Mar 26, 2025 - 06:50
Mar 26, 2025 - 10:23
 0
Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு.. பிரபலங்கள் நேரில் அஞ்சலி
மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, ’கடல் பூக்கள்’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, 'சமுத்திரம்’, ’ஈர நிலம்’, ’அல்லி அர்ஜுனா’, ’ஈஸ்வரன்’, ‘அன்னக்கொடி’, ‘விருமன்’ போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் மனோஜ் பாரதி ராஜா நடித்திருந்தார்.

இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த மனோஜ் பாரதிராஜா, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணிப்புரிந்துள்ளார்.

 கடந்த 2023-ஆம் ஆண்டு மனோஜ் பாரதி ராஜா இயக்கத்தில் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் சுசீந்திரன் தயாரித்திருந்த இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மனோஜ் பாரதிராஜா மறைவு

48 வயதான மனோஜ் பாரதிராஜாவுக்கு சமீபத்தில் இருதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 26)  மனோஜ் பாரதிராஜாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி

சென்னை சேத்துப்பட்டில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர்கள் ராமராஜன், கார்த்தி, ரோபோ ஷங்கர், இயக்குநர்கள் சேரன், பா.விஜய், தியாகராஜன், மாரிசெல்வராஜ், பேரரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow