PM Modi Visit Ukraine Today : பிரதமர் மோடி அரசு முறை பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்று போலந்து சென்றடைந்த மோடி, அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்கை (Donald Tusk) சந்தித்து பேசினார். 1979ம் ஆண்டுக்கு பின்னர் 44 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார்.
போலந்தில் பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவும் போலந்தும் சர்வதேச அரங்கில் பரஸ்பரமாக நட்புடன் இயங்கி வருகின்றன. போலந்து நிறுவனங்கள், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் இணைய முன்வர வேண்டும்'' என்றார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, 'உக்ரைன் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் நிலவும் நிலைமை கவலை அளிக்கிறது. எந்த பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி போலந்தில் இருந்து இன்று உக்ரைனுக்கு செல்ல உள்ளார். போலந்து எல்லையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பிரதமர் மோடி ரயிலில் செல்ல உள்ளார். போலந்தில் இருந்து ரயிலில் புறப்படும் பிரதமர் மோடி, சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் சென்றடைவார். அங்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் செல்ல இருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு இந்த போர் தொடங்கிய நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனும் ஓரளவு பதிலடி தாக்குதல் கொடுத்து வரும் நிலையில், இரு நாடுகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. போரை நிறும்படி ரஷ்யாவுக்கு ஐ.நா தொடர் கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை. உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ஆனாலும் 'போர் எதற்கும் தீர்வு அல்ல; போரை நிறுத்த வேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போதும் உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து பேசிய மோடி, போர் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வராது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.