BJP Tamilisai Soundararajan Advice To TVK Vijay : நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக கட்சியின் உறுப்பினர்களின் சேர்க்கையை ஆன்லைன் மூலம் தீவிரப்படுத்தினார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் அதிகமானது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய், கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை தனது தாய் தந்தை முன்னிலையில் வெளியிட்டார் விஜய்.
கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகை பூ, யானை, என வெற்றியை பிரதிபலிக்கும் விதமாகவே கட்சியின் கொடி இருந்தது. மேலும், தமன் இசையில் வெளியான தவெகவின் பாடல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, விஜய் தவெக கட்சியின் உறுதிமொழியை ஏற்றார்.
தவெக கட்சிக் கொடி அறிமுக விழாவை முன்னிட்டு, சீமான், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதற்கு, முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இந்த சேவை பொது மக்களுக்கு முழுமையாக இருக்க வேண்டும்.
கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள், பாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை கொடி மங்களகரமாக இருக்கிறது. மஞ்சளும், குங்குமமாக எனக்கு தோன்றுகிறது. கட்சிக்கொடி ஏற்றியபோது விமர்சனங்களும் சேர்ந்து ஏற்றப்பட்டு இருக்கிறது.
கட்சிக் கொடியில் இருக்கும் யானை, பூவை பற்றி எல்லாம் விமர்சனம் வந்திருக்கிறது. விமர்சனம் வருவது என்பது, ஆரோக்கியமான அரசியல்தான். விமர்சனம் வரவில்லை என்றால், அரசியல் கட்சி பிரபலம் அடைய முடியாது. அந்த வகையில் தம்பி விஜய்யின் கொடி முதல் நாளிலேயே பிரபலமாக இருக்கிறது; விமர்சனமும் உள்ளாகியிருக்கிறது.
அவர்கள் எடுத்திருக்கும் உறுதிமொழியின் சார்பில் நின்று பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் நான் மகிழ்வேன். ஏனென்றால், சில நேரத்தில் சில கட்சிகள் ஆரம்பிக்கும் போது, ஒன்றாகவும், பயணிக்கும் போது வேறு ஒன்றாகவும் இருக்கிறது. அப்படியெல்லாம் தம்பி விஜய் அவர்கள் இருக்கக் கூடாது.
காலையில் நானே சில அரசியல் கருத்துகளை அவரிடம் எதிர்பார்த்தேன். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை குறித்து, கொஞ்சம் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. வரும் நாட்களில் தமிழக அரசியலை, அவர் முன்னெடுத்துச் செல்லும்பொழுது முதிர்ந்த தலைவராக அவர் உருவெடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.