NTK Sivaraman Death : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பள்ளி மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதற்காக, 17 மாணவிகள் பள்ளியிலே தங்கி பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியான சிவராமன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
இந்நிலையில், இரவு நேரங்களில் மாணவிகளை மிரட்டி சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 12 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளியில் தங்கியிருந்த 17 மாணவிகளில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை போலீசார் கைது செய்தனர்.
அப்போது சிவராமன் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால் அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையினையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சிவராமன் எலிகளுக்கு கொடுக்கப்படும் விஷ மாத்திரையை கைது செய்யப்பட்ட 18ஆம் தேதி அன்று சாப்பிட்டதாக போலீசாரிடம் நேற்று தெரிவித்தார். உடனடியாக அவருக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அவர் எலிகளுக்கான விஷ மாத்திரையை தின்றதும், அந்த விஷம் ரத்தத்தில் கலந்து இருப்பதையும் டாக்டர்கள் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்துள்ளார். நேற்று சிவராமன் மீது மூன்றாவது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் பெற்றோர் கொடுத்த சிவராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.