உலகம்

டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட  கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நவம்பர்  5ம் தேதி நடைபெறாவிருக்கும் தேர்தலில்  ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் மோதுகின்றனர்.

இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை 21ம் தேதியன்று அறிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட உள்ளார்.

கமலா ஹாரிஸ் இன்று இரவு சிகாகோவில் நடக்கும் கட்சியின் தேசிய மாநாட்டில் முறைபடி அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளார். இந்த நிலையில் தான் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உண்டு என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றனர். இதில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. 

ஆனால் கடந்த மாதம் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் மற்றும் டிரம்புக்கு இடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு 43 சதவீதமும், ஜோ பைடனுக்கு 43 சதவீதமும் இருந்தது. இந்த கருத்து கணிப்பு வெளியான சமயத்தில் பிரச்சார உரையை மறப்பது, உலக நாடுகளில் நடந்த போர் என பல விஷயங்கள் ஜோ பைடனுக்கு பின்னடைவாக இருந்தது. போதாதற்கு, கடந்த மாதம் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும், ஆதரவும் கூடியது.

ஆனால், ஒரே மாதத்தில் கருத்துக்கணிப்பில் டிரம்ப் பின்தங்கியதற்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பிரச்சார முறை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த மாதம் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிசை விட தாம் அழகாக இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

மேலும், ஜூலை 31ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் ஓர் இந்தியரா, அல்லது கறுப்பினத்தவரா? அவர் எப்போதும் இந்திய பாரம்பரியத்தையே சேர்ந்தவர் என இனவெறியை தூண்டும் அளவிற்கு அவர் பேசினார். 

மேலும் படிக்க: ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை..

கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை விட பைடனுக்கு கறுப்பினத்தவர்கள் 92% வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை அவர்களின் வாக்குகளை பெறுவதில் டிரம்ப் அதிக முனைப்போடு இருந்தார். ஆனால் கமலா ஹாரிசிக்கு எதிராக டிரம்ப் மேற்கொள்ளும் பிரச்சார முறை தொடர்ந்து சர்ச்சைகுரிய வகையில் இருப்பதாகவும் இதனால் அவர் அமெரிக்கர்களின் வெறுப்பை சம்பாதிக்கக்கூடும் எனவும் பலர் தெரிவிக்கின்றனர்.