உலகம்

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்றார்களா தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படுபவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள், சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா முழுவதும் தீவிரவாத இயங்களை சேர்ந்தவர்கள் வேறு ஏதேனும் நாச வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்ற கோணத்தில் பல்வேறு முக்கிய இடங்கள், கோயில்கள், சுற்றுலாத்தலங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அதே நேரத்தில், பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, தீவிரமாக தேடி வரும் நிலையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட கூறப்படும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 5 பேர் நேற்று ( மே.4) சென்னையில் இருந்து நண்பகல் 11.59க்கு இலங்கை சென்ற விமானத்தில் தப்பிச் சென்றதாக சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு இமெயில் வந்ததாக கூறப்படுகிறது.

இமெயில் வந்தபோது, சென்னையில் இருந்து விமானம் இலங்கைக்கு சென்றதால், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக, இலங்கையில் உள்ள விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் இலங்கை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்குப்பின், சந்தேகப்படும்படியாக யாரும், விமானத்தில் வரவில்லை என்பதை கொழும்பு அதிகாரிகள் உறுதிசெய்தனர். இதனால், சென்னைக்கு வந்த இமெயில் வதந்தி என்பது விசாணைக்கு பின் தெரியவந்தது. இந்த வதந்தியால், இலங்கை சென்ற ஏர்லைன்ஸ் விமானம், சோதனைக்கு பின்னர், சிங்கப்பூர் செல்வது தாமதமானது.