தமிழ்நாடு

அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார்?- தமிழகத்திற்கு படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார்?- தமிழகத்திற்கு படையெடுக்கும் மத்திய அமைச்சர்கள்

கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தற்போதே மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது பாஜக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அமித்ஷா நாளை வருகை

இதன் தொடர்ச்சியாக பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. தமிழக பாஜக சட்டமன்ற தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் அடுத்த மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் பல்வேறு யூகங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ராஜ்நாத் சிங் வருகை

இதேபோன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராஜ்நாத் சிங் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தவுடன், அவரை வரவேற்க முப்படை தளபதிகள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் சூலூர் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

ராஜ்நாத் சிங்கின் வருகையை முன்னிட்டு, சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தினர் . இதன் ஒரு பகுதியாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், விமானப்படை தளத்திற்கு செல்லும் சாலைகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல்துறை மற்றும் விமானப்படை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாகவும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்காகவும் மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.