தமிழ்நாடு

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
Vijay garlanded with a giant crane - Case filed
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, திருவாரூரில் பெரிய கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக கடந்த 13-ஆம் தேதி அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டாவது கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி பயணம் மேற்கொண்டார்.

கிரேன் மூலம் வரவேற்பு

அப்போது, திருவாரூர் தியாகராஜர் கோயில் தெற்கு வீதியில் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு ஆரவார வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பின் ஒரு பகுதியாக, திருவாரூர் பனகல் சாலை தெற்கு வீதி சந்திப்பில், பெரிய கிரேன் மூலம் விஜய்-க்கு ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது.

இந்தச் செயல் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரிய ஆபத்து விளைவிக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாகக் புகார் எழுந்தது. மேலும், இதற்காக காவல்துறையினரிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

காவல்துறை நடவடிக்கை

இதையடுத்து, திருவாரூர் நகர காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மதன் உள்ளிட்ட 2 நிர்வாகிகள் மற்றும் ராட்சத கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.