தமிழ்நாடு

மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் - ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முக்கிய நடவடிக்கை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உள்ளது என கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 மோடிக்கு எதிராக தவறான தகவலை பரப்புகிறார் -  ராகுல் காந்தி மீது வானதி சீனிவாசன் சாடல்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
கோவை சுங்கம் சி.டி.சி டிப்போ எதிரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிழற்குடை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு புதிய பேருந்து நிழற்குடை கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

மக்களுக்கு சேமிப்பு வாய்ப்பு

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை 19.5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. முக்கியமான இந்தப் பகுதியில் பயனியர் நிழற்குடை அமைக்கின்ற பொழுது, எலக்ட்ரானிக் போர்டு, வைபை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தமாக இது இருக்கும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகம் போன்ற உற்பத்தி துறை அதிகமாக உள்ள மாநிலம் பலன் பெறும் விதமாக இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கிறது.சராசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள், பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் வியாபாரத்தை அதிகப்படுத்தும். மக்களுக்கு சேமிப்பு வாய்ப்பினை ஏற்படுத்தும்.

ராகுல் விரக்தியில் பேசுகிறார்

இந்த வரி சீர்திருத்தம் வாயிலாக பெண்களுக்கு நிறைய பலன் கிடைக்க துவங்கியிருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொரு பொருளின் விலை குறையும் பொழுது வீட்டில் சேமிக்கின்ற பணம் குடும்பத்தின் நலனுக்கு செலவிடப்படும்.இதனால் பெண்கள் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்த வரி குறைப்பு நடவடிக்கையில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

கோவையில் அக்டோபர் முதல் வாரத்தில் ஜிஎஸ்டி குறைப்பிற்காக மிகப்பெரிய பிரம்மாண்டமான விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி ஓட்டு திருட்டு என்று தேர்தல் கமிஷனுக்கு எந்த புகாரையும் கொடுக்காமல் மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.தேர்தல் கமிஷன் இதுதொடர்பான விளக்கங்களை கொடுத்த பின்னரும் மீண்டும், மீண்டும் அவர் இதைப்பற்றி பேசுவது அவரின் விரக்தியை காட்டுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரம்

பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டிக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் தேர்தல் கமிஷன், வாக்காளர் பற்றி தவறான தகவலை அவர் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதற்கு கடுமையான கண்டனங்கள்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பற்றி பேசாமல், பாஜக வெற்றி பெறும் இடங்களில் மட்டும் இதைப்பற்றி பேசுவதை காங்கிரஸ் கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

கிரைண்டர் உற்பத்தியில் கோவை தான் முன்னணியில் இருக்கிறது. வரி குறைப்புடன் அவர்கள் துறைக்கு வலு சேர்க்கும் விதத்தில் மாற்றங்கள் ஏதாவது செய்ய வேண்டி இருந்தால் மத்திய அரசிடம் நாங்கள் பேசத் தயார். கிரைண்டருக்கான ஜிஎஸ்டி குறைக்கபடாதது பற்றி விளக்கமாக சொல்வதற்கு என்னிடம் தகவல் இல்லை. கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை கொடுத்தால் அவர்களுக்காக பேச தயாராக இருக்கிறேன்.

ரவுடிகள் ராஜ்ஜியம்

தமிழகத்தில் சமூக நீதி மாடல் என்று ஆட்சி நடத்தும் திமுக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவப்படுகொலைகள் என தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. திராவிட மாடலுக்கும் ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கும் எந்த வித்தியாசம் கிடையாது. திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி.

தவெக கூட்டத்திற்கு விதிமுறைகள் விதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்தினால், பெரிய நிகழ்ச்சிகள் நடத்தினால், அரசு சொத்துக்களை சேதப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தனி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்று நடக்கும் பொழுது தனியார் சொத்துக்களுக்கும் பிரச்சனை வருகிறது. சொத்து பாதிப்பு வந்தால் அதற்கென்று நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.கூட்டத்தை கூட்டிவிட்டால் எந்தவித அராஜகமும் செய்து விடலாம் என்ற மனப்பான்மை யாருக்கும் வரக்கூடாது. அது பொது ஒழுங்கு கிடையாது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.