தமிழ்நாடு

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி
தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய பாஜக உறுப்பினர் காந்தி, படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து வெளியே வரும் மாணவர்களுக்காக பொறியியல், மருத்துவம் போல சட்டக்கல்லூரி கட்டித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு போனாலும் எப்படியும் தேர்ந்து விடுவார்கள் என்று கூறிய அவர், சென்னை, மதுரை நீதிமன்றங்களில் உள்ள பெண் நீதிபதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக கூறினார். மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும் கூட நிதி இல்லாத காரணத்தினால் தற்போது அதனை செயல்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் ரகுபதி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் காந்தி, விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்களுக்கு மூன்றுவருடம் மானியம் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும், ஆண்டுதோறும் பதிவு செய்யும் ஒன்பதாயிரம் வழக்கறிஞர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு உதவி செய்து வருவதாகவும் அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.