லைஃப்ஸ்டைல்

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் எடை கூடுமா? உண்மை இதுதான்?

மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் எடை கூடுமா? உண்மை இதுதான்?
மஞ்சள் தர்பூசணி ரகசியம்
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. கூழ், பதநீர், தர்பூசணி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. செக்கச் சிவந்த நிறத்தில்தான் தர்பூசணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், ‘மஞ்சள் நிற தர்பூசணி’களும் தற்போது பரவலாக விற்கப்படுகின்றன. ‘இந்தப் பழத்தை வாங்கிச் சாப்பிடலாமா? ஒவ்வாமை ஏதாவது ஏற்படுமா?’ என்று பலருக்கும் பலவித சந்தேகம் இருக்கும்.

தர்பூசணி வகைகள்

தர்பூசணியில் ஒரு வகைதான், ‘மஞ்சள் தர்பூசணி’. அதனுடைய சதைப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில பழங்களில் கடினமான மேற்தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தப் பழம், சிவப்பு தர்பூசணியைவிட சற்றே இனிப்பாக இருக்கும். பொதுவாகவே, தர்பூசணியின் நிறமானது ‘லைகோபீன்’ என்ற வேதிப்பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ‘மஞ்சள் தர்பூசணி’யில் லைகோபீன் அதிகமில்லாததாலேயே மஞ்சள்நிறத்தில் காணப்படுகிறது.

இந்த வகை ‘பாலைவனத்தின் ராஜா’ என்றும் ‘மஞ்சள் தர்பூசணி’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது பாலைவனப் பகுதிகளில் மட்டுமே விளைகின்றது. இந்தியாவில் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் சில வறண்ட பகுதிகளில் பெரும்பாலும் விளைகிறது. இந்தப் பழத்தில் குறைந்த கலோரி, அதிக நீர்ச்சத்து நிறைந்திருக்கும். தோராயமாக 92 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளதால், நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன், செரிமானத்திற்கும் துணைபுரிகிறது.

தர்பூசணி அல்லது வத்தகை (watermelon citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம், தர்பூசணி, வத்தகப்பழம், கோசாப்பழம், தர்பீஸ், தண்ணீர்ப்பழம், குமட்டிபழம், தண்ணீர்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இதன் வெளிப்புறத்தோல் பகுதி பச்சை, மஞ்சள், வெள்ளையாக இருக்கும். அதன் உட்புறம் சாறாகவும், இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சிவப்பு நிறத்திலிருக்கும்.

உடல் எடை கூடுமா?

சிலவகை மென்சிவப்பாகவும், சிலவகை மஞ்சளாகவும், பழுக்காத போது பச்சைநிறத்திலும் காணப்படும். ‘மஞ்சள் தர்பூசணி’யானது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டுள்ளது . உடல் வெப்பநிலையைப் பராமரிக்கவும், செரிமானத்தை ஆதரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் போதுமான நீரேற்றம் மிக முக்கியமானது. மஞ்சள் தர்பூசணியை உட்கொள்வது இழந்த திரவங்களை நிரப்பவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவும். தவிர, குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் நாம் இருக்க உதவுகிறது.

‘மஞ்சள் தர்பூசணி’யில் வைட்டமின் ‘சி’, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ‘சி’_யானது நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறது. காயத்தைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது. மஞ்சள் தர்பூசணிக்கு அதன் தனித்துவமான நிறத்தை ‘பீட்டா கரோட்டின்’தான் அளிக்கிறது. இந்தச் சத்தானது நம் உடலில் வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றப்பட்டு பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

100 கிராம் பழத்தில் 30 கலோரிகளே இருக்கும். எனவே, ‘எடை கூடிவிடுமோ’ என்ற பயமில்லாமல் வயிறு நிறைய சாப்பிடலாம். மஞ்சள் தர்பூசணியில் உள்ள ‘சிட்ருல்லைன்’, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், இதயத்துக்கும் இதமளிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான அமைப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது.