தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், அரியலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை விட்டு, விட்டு பெய்ததால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சுழற்சி மேலும் வலுப்பெற்றுள்ளதால், மழைப்பொழிவு மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.