தமிழ்நாடு

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்
தவெக மாநாடு வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் திருமண நிகழ்விற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “மத்திய அரசு கொண்டு வரும் இந்த மசோதாவின் நோக்கம் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், அமைச்சர்கள்மீது ஏதாவது குற்றச்சாட்டைச் சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்து 30 நாள் ஆனவுடன் அவர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கூடிய மிகக் கொடூரமான மசோதாவை மோடி தலைமையிலான இந்த அரசாங்கம் கொண்டு வருகிறது.

இபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்

நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் இந்த மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட வேண்டும். தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனப் பாஜக, அதிமுக, தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்தக் கருத்து மிக மிகத் தவறானது. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்க்காரர், அவரைத் தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாது,

தமிழர் என்ற கருத்தைச் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றக்கூடிய முயற்சி எடுபடாது.வேண்டுமென்றால் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் எனக் கூறி வாக்கு கேட்கட்டும், அதுதான் நியாயம்.எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்த விவகாரம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

சொந்த நலனுக்காக கூட்டணி

முத்தரசன் அப்பாவே நினைத்தாலும் என்னைத் தோற்கடிக்க முடியாது என்ன சொல்கிறார். தந்தை பெரியார், அண்ணா படத்தைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி பகுத்தறிவுவாதியா, இல்லையா எனக் கேட்க விரும்புகிறேன். அவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் இந்தக் கருத்தைச் சொல்லமாட்டார். என்னுடைய தந்தை இறந்துவிட்டார். எங்க அப்பாவால் எப்படி வர முடியும். ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி பாஜக.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சம்மந்தி வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் தன்னுடைய சொந்த நலனுக்காக அவர் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து இருக்கிறார் என முத்தரசன் சாடினார்.

தவெக மாநாட்டிற்கு வாழ்த்து

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். தமிழக அரசு எந்த இடையூறும் அவர்களுக்குச் செய்யவில்லை. ஒருவேளை மாநாட்டை ஒத்தி வைக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அதற்காக இது போன்ற கருத்துக்களை சொல்லிப் பரப்புகிறார்கள்” எனக் கூறினார்.