தமிழ்நாடு

பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!
Sarathkumar Slams Vijay Over Remarks on Elected Leaders
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தில் நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், ”தனது தந்தை சொந்த வீடு கட்ட முடியாமல் 11 வீடுகள் மாறி குடிபெயர்ந்தார். நான் கஷ்டப்பட்ட காலத்தில், 'புலன் விசாரணை' படத்தில் விஜயகாந்த் தனக்கு வாய்ப்பளித்தார். அவர் என்னை புரட்டியும் எடுத்திருக்கிறார்.

நான் வானத்தில் இருந்து குதித்த நட்சத்திரம் இல்லை, கடின உழைப்பால் உயர்ந்தவன். தமிழகத்தில் மட்டும் 20,000 மன்றங்களைக் கொண்ட ஒரே நடிகர் என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் வெற்றி:

தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்கள் மூலம் தான் சம்பாதித்த பணத்தை நலத்திட்ட உதவிகள் மூலம் மக்களுக்கே மீண்டும் அளிப்பதற்காக வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 'திமுக 40-க்கு 40' என்ற சொல்லை முதன்முதலில் முழங்கியவன் நான் தான் என்றார். ”தற்போது அவர்கள் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று இங்கு நான் கூறுகிறேன், வருகிற 2026 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நல்லாட்சி அமைய கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன், நீங்கள் தயாரா?” என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

விஜய்யின் பேச்சுக்கு கண்டனம்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களான முதல்வர், பிரதமர் ஆகியோரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சரத்குமார் எச்சரித்தார். ஸ்டாலின் அங்கிள், மிஸ்டர் மோடி, பாசிசம், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியதை அவர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், சிங்கம் சிங்கமாக இருக்க வேண்டுமே தவிர, தூங்குகின்ற சிங்கமாக இருக்கக் கூடாது என்றும் மறைமுகமாக விஜய்யை சாடினார். விஜய் தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிக்கும்போது தனக்கு வேதனையாக இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்று முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின், இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவரான விஜய், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் போன்றோரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.