தமிழ்நாடு

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த முறை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நல்ல மழைப்பொழிவை அளித்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த முறை எவ்வளவு மழை பெய்தாலும் மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பருவமழைக்கு முன்பாக வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரி, மழைநீர் தேங்காமல் வழிந்தோடச் செய்ய வேண்டும் எனவும், நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தையும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சீரமைத்து, மழைநீர் தேங்காதவாறு புதிய சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகளைச் சீராகப் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்குச் சாயும் நிலையில் உள்ள மரங்கள், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர் தேங்கும் பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்களுக்கான இடங்களைத் தேர்வு செய்யவும், கொசு உற்பத்தி மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை போன்ற மற்ற துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மழையால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இந்த முறை அனைத்துப் பணிகளும் முழுமையான திட்டமிடலுடன் நடைபெற்று வருகின்றன.