தமிழ்நாடு

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவையில்லை-தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவையில்லை-தமிழக அரசு திட்டவட்டம்
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன், “தமிழகத்தில் மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் அரசு தனிச்சட்டம் இயற்ற முன்வர வேண்டும்” என கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஒருவருக்கு மத நம்பிக்கையாக இருப்பது மற்றொருவருக்கு மூட நம்பிக்கையாக இருப்பதாகவும், சட்டம் கொண்டு வந்து அதனை தடுக்க முற்படுவது இயலாத காரியம்” என தெரிவித்தார்.

மேலும், நம்முடைய கொள்கையை பின்பற்றுவதில் தவறில்லை எனவும், மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்குமா என்பதை பார்த்து தான் சொல்ல வேண்டும் என பதில் அளித்தார்.

சட்டம் இயற்றுவது அவசியமில்லை

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றுவது ஒரு நம்பிக்கையைத் தடுத்து, மற்றொரு நம்பிக்கையைப் பாதுகாக்காது என்று குறிப்பிட்டார். இத்தகைய சட்டம் நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்றும், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மக்களிடையே பரவலாக உள்ள நிலையில், அனைத்தையும் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையும் சட்டத்தின் மூலம் தவறானது என்று கூற முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே இந்திய தண்டனைச் சட்டத்தில் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவுகள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆகையால், தனியாக ஒரு சட்டம் இயற்றுவது அவசியமில்லை என்பது அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.