சென்னை, கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் இரண்டு இளைஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொளத்தூரைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் (16) என்ற சிறுவன் மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, அவரது நண்பர் கௌதம் என்பவரைப் பக்கத்து ஏரியாவைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட கௌதம், ஹர்ஷவர்தன் உட்பட சில நண்பர்களை அழைத்துக் கொண்டு, தாதங்குப்பம் பகுதிக்குச் சென்று தனுஷ் தலைமையிலான கும்பலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனுஷ் கும்பல் அவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது. ஹர்ஷவர்தனைத் தவிர மற்றவர்கள் தப்பியோடிய நிலையில், தனியாக மாட்டிக்கொண்ட ஹர்ஷவர்தனை சுமார் 10 பேர் கட்டை மற்றும் கைகளால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி இருந்த ஹர்ஷவர்தன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார், அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் ஏற்கனவே அருண் என்பவரும், இரண்டு இளஞ்சிறார்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேலும் திருவள்ளூரைச் சேர்ந்த பிரான்சிஸ் லெவின் மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரிஷிகாந்த் ஆகிய இரு இளைஞர்களை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில இளஞ்சிறார்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.