சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 68 வயது முதியவர் ஒருவரை வடபழனி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், நேற்று வடபழனி, NGO காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டின் முன்பு நின்றிருந்த ஒரு முதியவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் அந்த முதியவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மளிகைக் கடை நடத்தி வருவதும், அவரது மகன் மற்றும் நண்பர் ஆகியோர் ஆந்திராவில் இருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளைக் கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
பாலகிருஷ்ணனிடமிருந்தும், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா என மொத்தம் 9.7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள அவரது மகன் மற்றும் நண்பரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.