தமிழ்நாடு

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!
திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்மகும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் மணிகண்டன் (24), தற்போது ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இன்று காலை அவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காகத் தோப்பூர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்துள்ளது. உயிருக்குப் பயந்த மணிகண்டன் பைக்கை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த ஒரு மரக்கடைக்குள் தப்பி ஓடி ஒளிந்துள்ளார்.

ஆனாலும், அந்த மர்மகும்பல் விடாமல் அவரை விரட்டிச் சென்று, மரக்கடைக்குள் புகுந்து மணிகண்டனை அரிவாளால் சராமரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அச்சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் இந்தக் கொலையை அரங்கேற்றியிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.