தமிழ்நாடு

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

கடந்த 1996 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, கடந்த 2012 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார்.

இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக் கூறி, அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டாலும், மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறி, வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி,
2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்து விட்டார். அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்கு பதிவு செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.

சொத்துக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா? இல்லையா? என்பதை முழுமையான சாட்சி விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு எனக் கூறி, சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்கும்படி சேலம் நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.