தமிழ்நாடு

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!
மல்லை சத்யா மீது அவதூறு வழக்கு – மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்!
மதிமுக குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூறி மதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், சூரி நந்தகோபால், தலைமை கழக வழக்கறிஞர் சுப்பாராஜ் சட்டத்துறை துணைச் செயலாளர் வினோத்குமார், வழக்கறிஞர் செந்தில் செல்வன், மதிமுக சைதை மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் புகார் மனுவை டிஜிபி அலுவலகத்தில் அளித்தனர். இதேபோல் மதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், "கடந்த சில நாட்களாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர் துரை வைகோவையும் வன்மத்தோடு அவமானமாக பேசிய நாஞ்சில் சம்பத் மீதும், வல்லம் நசீர் மீதும், திருப்பூர் துரைசாமி மீதும், மல்லை சத்யா மீதும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எங்களது தலைவரையும், இயக்கத்தையும், உயிராக நினைக்கும்
கழகத்தின் கொடியையும் அவமானப்படுத்தியுள்ளார்கள்.

இன்று தமிழ்நாடு முழுவதும் மதிமுக மாவட்ட சட்டத்துறை சார்பாக மாவட்ட காவல் தலைமை அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நால்வரும் தலைவர் மீதும், முதன்மை செயலாளர் மீதும் கூறிய கருத்துக்களை இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும். அவர்களாகவும் ஒரு சிலரின் தூண்டுதல்களின் பெயரிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். மல்லை சத்யாவுக்கு எதிராகவும் இன்று புகார் கொடுத்துள்ளோம். மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் செயல்பட்டுள்ளார். ஜாதி ரீதியாக தவறான செய்திகளை மல்லை சத்யா பரப்பி வருகிறார்.

அடிமட்ட தொண்டனாக இருந்த மல்லை சத்யாவை மாநில இளைஞரணி செயலாளர் பின் துணை பொது செயலாளர் என தாழ்த்தப்பட்டவரை அறிவித்தது மதிமுக. வைகோவை ஜாதி ரீதியாக செயல்படுகிறார் எனக் கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். வைகோவின் அனுமதியோடுதான் இன்று புகார் கொடுத்துள்ளோம். மல்லை சத்யாவை விட மூத்தவர்கள் கட்சியில் பலரிருந்தும் மல்லை சத்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினோம். மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கால சூழ்நிலைகளை பொறுத்து விரைவில் மல்லை சத்யா கட்சியில் இருந்து நீக்கப்படுவார்" என்று வழக்கறிஞர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.