அரசியல்

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் உள்ளது.. இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் உள்ளது.. இபிஎஸ் குற்றச்சாட்டு
Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் இன்று, ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுகவின் புதிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் மரியாதை இல்லை.
நேர்மையாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக திமுக அரசு கொடுக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறை அதிகாரிகளுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக உயர் அதிகாரிகள் அழைத்து பேசி அதனை தீர்த்து வைக்க வேண்டும். இதுதான் அரசின் கடமை. அதை விடுத்து நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழி வாங்குவது நல்ல அரசுக்கு இது அழகல்ல” என்றார்.

தொடந்து பேசிய அவர், “அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று கேட்போம். அவர்கள் கொடுத்தால் கொடுக்கலாம். இல்லை என்றால் இல்லை என்று கூறலாம். இதற்காக நாங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை கேட்கப் போவது கிடையாது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக-பாஜக கூட்டணி குறித்து துணை முதல்வரின் கருத்து குறித்து பேசிய அவர், “தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பிரதமர் மோடி வீட்டின் கதவை தட்டவில்லையா?
அவர்கள் செய்தால் சரி, நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் தவறா? நாங்கள் அமித் ஷாவை சந்தித்ததில் தவறு என்ன இருக்கிறது. அவர் நாட்டின் உள்துறை அமைச்சர் தானே. அவரை சந்தித்தத்தில் என்ன தவறு இருக்கிறது” என்றார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என கூறியது குறித்த கேள்விக்கு, “டிடிவி தினகரன் கூட்டணி அமைச்சரவை என்று கூறுவதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார். நாங்கள் ஒன்றும் கூறவில்லை.நாங்கள்பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாங்கமாக தான் திமுக அரசாங்கம் உள்ளது. கொரோனா காரணமாக இருந்ததால்தான் அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அரசால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை. இதேபோன்று தாலிக்கு தங்கம் திட்டமும் கொரோனா காலத்தால் தான் கொடுக்க முடியாமல் இருந்தது.
இந்தத் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. திமுக அரசு வந்து தான் இந்த திட்டத்தை நிறுத்தியது.

அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதேபோன்று தான் காவேரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். அதிமுக அரசு வந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.


கிட்னி திருட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சமீபத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவமனையின் தலையீடு உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வறுமையை காரணமாக வைத்து கிட்னி திருட்டு சம்பவங்கள் சம்பவங்கள் நடப்பது மிகவும் வேதனைக்குரிய செயல்” என்றார்.

முதலவரை தரைகுறைவாக பேசியது குறித்த கேள்விக்கு, “என்னை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக முதல்வரும் துணை முதல்வரும் பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நான் யாரையும் தரக்குறைவாக இதுவரை பேசியது கிடையாது. வேகமாக பேசும் போது ஒருமையில் தவறுதலாக பேசியிருக்கலாம். அது தவறு என்றால் என்ன எந்த அளவிற்கு திமுகவினர் கீழ்த்தரமாக பேசுகின்றனர்” என தெரிவித்தார்.