தமிழ்நாடு

கோவை தனியார் கல்லூரி மாணவி மரணம்.. ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் விசாரணை

கோவை தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கோவை தனியார் கல்லூரி மாணவி மரணம்.. ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் விசாரணை
Coimbatore private college student dies
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 6 ஆம் தேதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 5 ஆம் தேதி இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பவபூரணியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவி பவபூரணி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 11 ஆம் தேதி மாலை ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொந்தோஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, பீளமேடு ஆய்வாளர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டது. இறந்த மாணவி தரப்பில் மூன்று பேர் இருந்தனர். அன்றைய தினம் பணியில் இருந்தவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவி உயிரிழந்த இடத்தில், இருந்து சிரிஞ்ச், இரண்டு எம்.எல் மருந்து ஆகியவை கோவை தடவியவியல் அலுவலகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இறப்பதற்கு முந்தைய நாள் இரவு பணியில் இருந்து வேறு யார் ? இறந்த மாணவிக்கும் வேறொருவருக்கு தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த மாணவி தினமும் தனது தம்பியுடன் போனில் பேசுவது வழக்கம். அவர் பேச்சு முழுவதும் மொபைல் போனில் பதிவு ஆகி உள்ளது. அந்த ஆடியோ பதிவுகள், விசாரணை அறிக்கை ஆணையத்தில் நாளை 14 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் தந்தை கந்தசாமி அவர் மகனுடன் முந்தைய நாள் இரவு அவருடன் போனில் பேசியதாகவும், வழக்கம் போல் அன்று இயல்பாகவே பதில் அளித்ததாகவும் அவர் கூறினார். மேலும், முந்தைய நாள் இரவு மகளுடன் யாரோ ? சண்டையிட்டு உள்ளனர் என்றும் மகளின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய உயர்மட்ட அளவில் பெண் அதிகாரி நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.