தமிழ்நாடு

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!
கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பூமார்க்கெட்டில் கல்லூரி மாணவி ஒருவரின் ஆடை குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இருதரப்பினரும் காவல் நிலையங்களில் மாறி மாறிப் புகார் அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் மலர் வாங்க வந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி, ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரை ஒரு மலர்க் கடை உரிமையாளர், இதுபோன்ற உடை அணிந்து வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு, தனது உடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பார்க்கும் உங்கள் பார்வையில் தான் தவறு உள்ளது என்றும் ஜனனி பதிலளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது, சிலர் தன்னை வீடியோ எடுக்க விடாமல் தடுத்ததுடன் மிரட்டியதாகவும் ஜனனி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஜனனி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதேநேரத்தில், ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது சில பூ வியாபாரிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பூமார்க்கெட் வியாபாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அவர்கள் கூறுகையில், "பெண்களின் உடை சுதந்திரத்தை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த மாணவி, கைகளைத் தூக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அது மற்றவர்களின் பார்வையில் தவறாகப் படக்கூடாது என்பதற்காகவே, ஒரு கடை உரிமையாளர் நல்ல முறையில் அறிவுரை கூறினார். அதனை அந்தப் பெண் தவறாகப் புரிந்துகொண்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டது" என்றனர்.

"பத்திரிகைகள் பெண்களைக் காப்பாற்றுவதற்காகச் செயல்பட வேண்டுமே தவிர, அவர்களைக் களங்கப்படுத்தும் செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது. உடைகளை அணிவது அவர்களின் சுதந்திரம் என்றாலும், எங்கு, எந்த உடையை அணிய வேண்டும் என்பதும் முக்கியம்," என வலியுறுத்தினர். இரு தரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.