தமிழ்நாடு

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!
அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை மருத்துவமனைக்கு பின் தொடர்ந்து வந்து, மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதுடன், ஒரு மாணவரிடம் இருந்து நகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஸ்ரீஹரி ஆகியோர் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள். நேற்று இருவரும் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அருகே உள்ள ஒரு டீ கடைக்கு வந்தபோது, அங்கு வந்த மற்றொரு தனியார் கல்லூரி (எஸ்.ஆர்.எம்.) மாணவர்களுடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த முகமது சுல்தானை, அவரது நண்பர் ஸ்ரீஹரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அதே மாணவர்கள், மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே மீண்டும் ஸ்ரீஹரியையும், முகமது சுல்தானையும் தாக்கியுள்ளனர். ஸ்ரீஹரி அங்கிருந்து ஓடி ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அவரது நண்பரான முகுந்தன் அங்கு வந்து உதவி செய்ய முயன்றார். அப்போது, மற்றொரு கல்லூரி மாணவர்கள் முகுந்தனையும் தாக்கி, அவரிடமிருந்த 4.5 சவரன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராயப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோதலில் காயமடைந்த முகமது சுல்தான், ஸ்ரீஹரி, முகுந்தன் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், ஸ்ரீஹரியின் தந்தை தி.மு.க. மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பொன்னரசு என்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.