தமிழ்நாடு

கோவையில் தண்டவாளத்தில் குழந்தை உடல் கிடந்த சம்பவம் - 6 பேர் கைது

கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் தண்டவாளத்தில் குழந்தை உடல் கிடந்த சம்பவம் - 6 பேர் கைது
தண்டவாளத்தில் குழந்தை இறந்து கிடந்த விவகாரத்தில் 6 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்
கோவை அடுத்த இருகூர் ராவுத்தர் தரைபாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தண்டவாளத்தில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை அடுத்து குழந்தையின் உடல் அருகே வெட்டப்பட்ட கோழி, மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவை கிடந்ததால் அந்தக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா ? அல்லது காதல் விவகாரத்தால் ? வீசி செல்லப்பட்டதா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தண்டவாளத்தில் குழந்தையின் சடலம்

இதைத்தொடர்ந்து சென்னை இருப்புப் பாதை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர் பாபு மேற்பார்வையில், கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில் கோவை இருப்புப் பாதை காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சென்னை ரயில்வே சைபர் கிரைம் காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகப்படும் படியான அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மரிய லூயிஸ், அவரது மனைவி ராதாமணி, பிரவீன் குமார், அவரது மனைவி கீர்த்திகா, நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த அக்சய், அவரது மனைவி வைஷாலி ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மரிய லூயிஸ், ராதாமணி தம்பதியருக்கு திருமணம் முடிந்து 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மகாராஷ்டிரா மாநிலம் சென்று வைஷாலியின் தங்கை மூலம் தெரிந்த ஒரு தம்பதியரிடம் குழந்தையை பெற்று கடந்த 13ஆம் தேதி காலை கோவை வந்துள்ளனர்.

6 பேர் கைது

அன்று குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இறந்ததாக இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று வீசி விடலாம் என்று மரிய லூயிஸ், ராதாமணி, அக்சய் குமார், பிரவீன் குமார் கீர்த்திகா ஆகியோர் சேர்ந்து காரில் ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்று இருகூர் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இறந்த குழந்தையின் உடலை வைத்துவிட்டு சென்று விட்டதாகவும், குழந்தை இறந்தது சனிக்கிழமை என்பதால் சம்பிரதாயபடி கருப்பு கோழியை அறுத்ததாகவும், மஞ்சள் கலந்த மசாலா பொடி தூவியதாகவும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அந்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை தத்தெடுக்கும் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் குழந்தை சட்டத்திற்கு புறம்பாக வாங்குவதும் விற்பதும் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இறந்த குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைத்து தண்டவாளப் பகுதியில் வைத்த குற்றத்திற்காகவும், குழந்தையின் இறப்பைப் பற்றி தகவல் முறைப்படி தெரிவிக்காமல் சட்டத்திற்கு புறமாக மறைத்ததற்காகவும், இறந்த குழந்தையின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் அவமரியாதை படுத்தியதற்காகவும், அந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.