தமிழ்நாடு

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!

சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!
சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான புதிய வழித்தடத்திற்குத் தமிழக அரசு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி, நிலம் கையகப்படுத்துதல், விரிவான ஆய்வுகள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தை இணைக்கும் ஒரு முக்கியத் திட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது.

தற்போது சென்னையில் இரண்டு முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து வசதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில், இந்தப் புதிய பூந்தமல்லி வழித்தடம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் நாசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 14 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை பணிகள் நடைபெறும்.

இரண்டாம் கட்டமாக, இந்த வழித்தடம் பரந்தூர் வரை நீட்டிக்கப்படும். சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூர் வரையிலான பணிகள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வழித்தடத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.