தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, 2015, ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து அரசிடம் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்குவதற்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். தற்போது, தமிழகத்தில் மட்டும் 29 மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட மறுவாழ்வு முகாம்களில் 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், மதரீதியான துன்புறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2024, டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கும் இதே போன்ற சலுகைகள் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.