தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

பாகிஸ்தானில் இருந்து வந்து, மருத்துவ சிகிச்சை, தொழில் ரீதியாக வந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிய காவல்துறை பட்டியல் தயாராக்கிறது.

தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!
தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் கணக்கெடுப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபோன்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவர்களோடு தங்கி இருக்கும் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சிகிச்சைக்காக வருபவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் வரையில் சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

இது தவிர ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக 500 பேர் வரையில், பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள். இதுபோன்று டெல்லிக்கும் அதிக அளவில் பாகிஸ்தானியர்கள் வருகை புரிவது தெரியவந்துள்ளது. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானில் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற திருமண பந்தங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று பாகிஸ்தானில் திருமண உறவு உள்ளிட் டவைகள் வைத்திருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய விவரங்களையும் அந்த மாநில அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் 24 மணி நேரத்துக்குள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இப்படி தான் 500 பேர் வரையில் தமிழகத்துக்கு வந்து செல்வதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படி தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் தற்போது எத்தனை பேர் உள்ளனர்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாகவும் அதுபோன்ற நபர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை தவிர்த்து அனைவரையும் நாளைக்குள் வெளியேற்று வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, சிகிச்சையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.