தமிழ்நாடு

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!
கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!
கோவை அரசு மருத்துவமனையில் ஜூலை 25 அன்று பிரகாஷ் - விஜயசாந்தி தம்பதிக்கு நான்காவது பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்ட் 4 அன்று குழந்தையுடன் வீட்டிற்குச் சென்றபோது, வீரம்மாள் என்ற இடைத்தரகர் குழந்தையை விற்பனை செய்வதற்காக வாங்கிச் சென்றுள்ளார்.

குழந்தை விற்பனைகுறித்து குழந்தைகள் நல உதவி எண் 1098-க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய ஒருங்கிணைப்பாளர், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீரம்மாள் குழந்தையைத் திருப்பூரில் உள்ள தனது தோழி வீட்டிற்கு அழைத்துச் சென்று விற்க முயன்றது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர் வீரம்மாளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தையின் பெற்றோருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவதாகப் பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை அரசு மேலும் உறுதி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 370, குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையாகச் செயல்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், கடத்தல், விற்பனை, மற்றும் சுரண்டல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.