தமிழ்நாடு

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?
Actor arrested in drug case
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைத்துறையினருக்கு இவர் போதைப்பொருள் சப்ளை செய்தாரா என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது மற்றொரு திரைப்பிரபலம் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.

நடிகர் பிரபாகரன் கைது

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த 18-ஆம் தேதி போரூரில் சரண்ராஜ் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திரைப்பட நடிகரும் இயக்குநருமான பிரபாகரன், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த பவன்குமார், நெற்குன்றத்தைச் சேர்ந்த ஹாசிக் பாஷா, ஆறுமுகம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரபாகரன், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'திருட்டு விசிடி' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் வெளியான 'சட்டமும் நீதியும்' என்ற வெப் சீரீஸை இவரே தயாரித்துள்ளார்.

மனைவி பிரிவால் போதைப்பொருள் பழக்கம்

போலீசார் விசாரணையில், பிரபாகரன் தனது மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் நண்பர்கள் மூலமாக மெத்தபெட்டமைன் போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். மனைவி மீண்டும் சேர்ந்த பின்னரும், போதைப்பொருள் பழக்கத்தை அவரால் விடமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

எந்த நேரத்திலும் கிடைக்கும் போதைப்பொருள்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பவன்குமார், தலைமறைவாக உள்ள மணி ஆகியோர் முக்கியப் புள்ளிகளாகச் செயல்பட்டுள்ளனர். மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பவன்குமார், ரக்ஷித் மூலம் விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.

ரக்ஷித் தனது நண்பர்களிடம், "என்னிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எந்த நேரத்திலும் கிடைக்கும்" என்று கூறி வந்துள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள நடிகர் பிரபாகரனுக்கும் இவ்வாறுதான் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரபாகரன், தான் வாங்கிய போதைப்பொருளை மற்ற திரை பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளாரா என்ற கோணத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கஞ்சா விநியோகம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள மணி, குமார், ராஜ்குமார் உள்ளிட்டோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.