தமிழ்நாடு

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு

4 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபோது, மூச்சுத் திணறி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பால் ஊட்டிய போது நேர்ந்த சோகம்.. 4 மாத குழந்தை உயிரிழப்பு
சென்னை ராஜமங்கலம் சிவசக்தி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அவரது மனைவி பிரியங்கா. இவர்களுடைய நான்கு மாத ஆண் குழந்தைக்கு நேற்று இரவு பிரியங்கா தாய்ப்பால் கொடுத்தார். குழந்தை தூங்கிய நிலையில் இருந்ததால் படுக்கையில் படுக்க வைத்தார்.

நீண்ட நேரம் ஆகியும் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த தாய் பிரியங்கா குழந்தையினை எழுப்ப முயன்றுள்ளார். குழந்தை மூச்சு பேச்சு இன்றி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரியங்கா மற்றும் தந்தை கார்த்திக் இருவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையினை தூக்கிச் சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து குழந்தை இறந்தது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாய்ப்பால் குடித்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நான்கு மாத ஆண் குழந்தை தாய் பால் கொடுக்கும் போது மூச்சு திணறி இறந்த சம்பவம் ராஜமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more: இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!