அரசியல்

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

பாமகவை இழுக்கும் திமுக?.. தாமரையா? சூரியனா?.. சூடுபிடிக்கும் தைலாபுரம் மோதல்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், கூட்டணிக்கான ரேஸில் குதித்துள்ளது தமிழகத்தின் கட்சிகள். ஒரு பக்கம் அதிமுக பாஜகவுடன் கைகோர்க்க, இன்னொரு பக்கம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தவெக அழைப்புவிடுக்க என அரசியல் களமே பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் என்னதான் எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, ஒற்றுமையாக தான் நாங்கள் இருக்கிறோம் என திமுக கூறிவந்தாலும், கூட்டணி பலத்தை மேலும் உயர்த்தவே அறிவாலயம் ஐடியா போட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக திமுக தலைமை, பாமக பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதற்கு அடித்தளம் போடும் விதமாகத் தான் முன்னதாக விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 போராளிகளுக்கு கட்டபட்ட மணிமண்டபத்தை திறந்து வைக்க இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த திறப்பு விழாவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஒரே மேடையில் ஸ்டாலினும் ராமதாசும் இணைந்து பங்கேற்க இருந்ததால் திமுக-பாமக கூட்டணி உருவாகும் என்று அப்போதே பேசப்பட்டது. ஆனால் விசிகவை தனது கூட்டணிக்குள் திமுக வைத்திருந்ததால் பாமகவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் பேசினர்.

இந்த நிலையில், வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் திமுக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கு விரோதி என பிரச்சாரம் செய்வோம்” என காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு, திமுகவுக்கு மறைமுகமாக ஆஃபர் கொடுப்பதுபோல் அமைந்துள்ளதாகவும், இதனால் பாமகவை கூட்டணிக்குள் திமுக இழுக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஏற்கனவே பாமக என்றாலே தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சி என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டு, தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவே இப்படி ஒரு ஆஃபரை கொடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். அதோடு, பாஜக கூட்டணிக்கு பாமக சென்றதற்கான காரணமே, அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தில்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும், பாமகவை கண்டுக்கொள்ளாமல் இருப்பதால், பாஜகவிற்கு பயம் காட்டவே அன்புமணி பொதுவெளியில் இப்படி பேசியதாக கூறினர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த நிலையில் தான் தைலாபுரத்தில் ’நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா’ என அன்புமணிக்கும்-ராமதாசுக்கு இடையே யார் கட்சியில் வெயிட்டு என்ற மோதல் ஏற்பட்டு அது தற்போது வரை நீண்டுக்கொண்டே வருகிறது. ஆனால், “தைலாபுரம் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது என்று ஒருதரப்பும், கட்சி இரண்டாக உடையப் போகிறது என இன்னொரு தரப்பும் சொல்கிறது. என்னதான் நடக்கிறது என விசாரித்த போது தான், வரும் மே 11 அன்று வன்னியர் சங்க மாநாடு மாமல்லபுரத்தில் நடக்க இருப்பதால் சுட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி. முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், அன்புமணியின் தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் ராமதாஸிடம் பேசி தற்காலிகமாக பிரச்னையை முடித்துள்ளார்களாம். அப்போது, 'அன்புமணி உங்கள் சொல்படி நடப்பார்' என்று உத்தரவாதம் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகிறது.



இதற்கிடையே, ராமதாஸுடன் முதன்மையானவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பலமுறை கூட்டணி தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சிதானாம் இது எனவும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். அந்தவகையில், பெரியவர் அறிவாலயம் பக்கம் சாய்ந்தால், சின்னவர் தாமரைப் பக்கம் சாய்வதற்கான ரூட்டை எடுப்பார் எனவும் இதனால் பா.ம.க இரண்டாகப் பிளவுபடுவதற்கான சூழலும் உண்டாகலாம் எனவும் தைலாப்புர வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.

இந்நிலையில் தைலாபுரத்தின் தந்தையும் மகனும் ஒரு முடிவுக்கு வந்து, கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுக்கிறார்களா அல்லது சூரியனை தேர்தெடுக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...