தமிழ்நாடு

“10 நாள் பயிற்சி..பார்டருக்கு செல்ல தயார்”-ராஜேந்திர பாலாஜி தடாலடி

எடப்பாடியார் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

“10 நாள் பயிற்சி..பார்டருக்கு செல்ல தயார்”-ராஜேந்திர பாலாஜி தடாலடி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
1000 இளைஞர்களை அழைத்து செல்ல தயார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்.

போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் இடைப்பட்ட பயிற்சி பெற்று எனது தலைமையில் போர்க்களத்தில் போரிட 1000 இளைஞர்கள் தயாராக உள்ளோம்.பயங்கரவாதத்திற்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் அதிமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும்.அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு இளைஞர்கள் தேவை என்று சொன்னால், விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல நான் தயாராக உள்ளேன்.


இந்தியாவை உலகமே பாராட்டுகிறது

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாரட்டுகிறது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதியில் நிறைவேற்றவில்லை.

நீட் ரத்து செய்வதாக கூறினார்கள், ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் மதுக்கடையை மூடுவோம் என ஸ்டாலின் சொன்னார். தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக கனிமொழி சொன்னார். ஆனால் மதுக்கடைகளை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாயை அதிகரித்துள்ளார்கள். அரிசி, பருப்பு மற்றும் செங்கல் விலை என சரமாரியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் இருந்தால் குடும்பத்தை நடத்தலாம் என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திமுகவிற்கு இறங்கு முகம்

அதிமுக ஆட்சியின் சிறப்பையும் ஸ்டாலின் ஆட்சியின் கஷ்ட காலத்தையும் வகுத்து பார்த்தால், எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய்யா, ஸ்டாலின் சொல்வது பொய்யா என்பது மக்களுக்கு தெரியவரும்.ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.அது நடக்காது. திமுகவிற்கு மக்கள் சம்பட்டியடி கொடுப்பார்கள்.

குரு பெயர்ச்சியில் திமுகவிற்கு இறங்கு முகம், அதிமுகவிற்கு ஏறுமுகம். திமுகவின் ஆட்சியில் முதல்வரை தவிர அரசு ஊழியர்கள் மக்கள் உள்ளிட்ட அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான தக்க பதிலடி 2026 சட்டமன்றத்தேர்தலில் கிடைக்கும்” என தெரிவித்தார்.