அரசியல்

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி

“முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் திசை திருப்பும் தந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Edappadi Palaniswami and CM Stalin
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் (52), அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதேபோல் கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர், முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

காவல்துறை விசாரணையில், அவர் கோவை, பேரூர் ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளி ராஜன் (60) எனத் தெரியவந்துள்ளது. கொங்கு மணடலத்தில் நடைபெற்ற இவ்விரண்டு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், “எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?” என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசை திருப்பும் தந்திரம் (Diversion Tactic) மட்டுமே!

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!

மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.