அரசியல்

2026 தேர்தலுக்குத் தயாராகும் விஜய்.. தவெக சார்பில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கத் திட்டம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2026 தேர்தலுக்குத் தயாராகும் விஜய்.. தவெக சார்பில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கத் திட்டம்!
Plans to apply for the symbol on behalf of TVK
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகுச் செயல்பாடின்றி இருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு சின்னம் கேட்டுத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கத் தயாராகி வருகிறது.

கரூர் சம்பவமும் மௌனமும்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

ஆனால், கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டுப் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுத் த.வெ.க. சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் பாதிக்கப்பட்ட கரூர் மக்களை நேரடியாகச் சந்திக்காமல் மௌனம் காத்து வந்தனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னரே, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீண்டும் வெளியில் வரத் தொடங்கினர்.

சின்னம் கேட்டு விண்ணப்பிக்கத் திட்டம்

இந்நிலையில், இந்த மௌனத்தைக் கலைத்துவிட்டு, த.வெ.க. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தீவிரமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. மக்களிடம் எளிதில் கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு தேர்தல் சின்னத்தைத் தேர்வு செய்ய த.வெ.க. முடிவு செய்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் 5 சின்னங்களைத் த.வெ.க. தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த 5 சின்னங்களை வரும் நவம்பர் 6-ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் 2026 தேர்தலுக்கான வேலைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.