திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த விண்ணவனூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியின் தந்தை மணி மண்டபத்தை திறந்து வைப்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் வருகை புரிந்தார்.
மணி மண்டபத்தை திறந்து வைத்த பின்னர் மேடை ஏறி பேசிய திருமாவளவன், “ஒரு மாநாடு நடத்தி விட்டு உடனேயே அவரை முதல்வர் என எழுதும் தமிழக ஊடகங்கள், இந்த வருடத்திலேயே இரண்டு மாநாடு நடத்தி பல லட்சம் பேர்களை ஒன்று திரட்டிய திருமாவளவன் திரை துறையில் உயர்ந்த கதாநாயகன் அல்ல, தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கார் கொள்கைகளை பின்பற்றி 35 ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்து இந்தியா முழுவதும் தற்போது விடுதலை சிறுத்தை கட்சிகளின் கொடி பறக்கச் செய்யும் என்னை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கிறது” என குற்றம் சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பல்வேறு விஷயங்களை பேசிய விஜய், ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து பேசி இருந்தார். அதோடு, பாசிசம்... பாயாசம் என்றும், கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்றும் கூறி இருந்தார்.
விஜய்யின் பாசிசம் குறித்த கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டவர்களை ஆவேசமாக பேசியுள்ளார் திருமாவளவன்.