அரசியல்

“உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்”- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி!

கரூர் சம்பவம் தொடர்பாக, "உண்மையும் நீதியும் நிச்சயம் வெளிவரும்" என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

“உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்”- தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேட்டி!
TVK Adhav Arjuna
கரூர் சம்பவம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்துக்கு ஆளான ஆதவ் அர்ஜுனா டேராடூனில் பேட்டியளித்தார். விரைவில் உண்மை வெளிவரும் என அவர் தெரிவித்தார்.

'புரட்சி வெடிக்கும்' பதிவு மற்றும் நீதிமன்ற உத்தரவு

கரூர் சம்பவம் தொடர்பாக, ஆதவ் அர்ஜுனா தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்" என்று கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

இந்தக் கருத்து குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி எஸ்.எம். கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு நீதிமன்றம், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, முதல் முறையாக டேராடூனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "நாங்கள் பிரச்சினையை நீதி ரீதியாக அணுகுகிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்" என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டுச் சென்றார்.

ஆதவ் அர்ஜுனா எங்கே?

கரூர் சம்பவம் தொடர்பாகப் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா, தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ளார். அங்குள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் உயர் நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.

வழக்கு மற்றும் விசாரணை நிலவரம்

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தக் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், த.வெ.க. பரப்புரைப் பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்குப் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.