அரசியல்

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
Edappadi Palaniswami
கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்தத் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு மீதான முக்கிய குற்றச்சாட்டுகள்

கரூர் கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டினார்.

"தவெக கூட்டம் நடைபெற்றபோது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். கடந்த கால விஜய் பரப்புரைகள், மக்கள் திரட்சி ஆகியவற்றை ஆய்வு செய்து முழுமையான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை. முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ, அமைச்சர்களோ கூட்டம் நடத்தினால் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனால், தவெக கூட்டம் மட்டுமின்றி அதிமுகவின் எழுச்சிப் பயணத்திற்குக்கூட காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியை காவல்துறை செய்யவில்லை.

அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிக்கும் முறையாகப் பாதுகாப்பு கொடுத்தோம். தற்போது திமுக ஆட்சியில் நீதிமன்றம் சென்றுதான் கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அரசு உரிய பாதுகாப்பு கொடுப்பதில்லை.

"காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் தள்ளுமுள்ளுயும், உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம். அரசு கடமையிலிருந்து தவறி விட்டதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள்

கரூர் சம்பவம் குறித்துப் பல சந்தேகங்களை எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, "விஜய் பரப்புரை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மின்தடை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் விஜய் பேசும்போதே ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. அரசு விரைவாக ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது எனத் தெரியவில்லை. இந்தக் கொலைகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

வரலாற்றில் இவ்வளவு உயிரிழப்பு இல்லை

"தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே அரசியல் கட்சிக் கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்ததில்லை," என்று வேதனையுடன் குறிப்பிட்ட அவர், "பாதுகாப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு நியதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நியதி என்ற நிலை இருக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி உயிரிழப்பு வேறு; கரூர் உயிரிழப்பு வேறு. ஆனால் இரண்டு சம்பவங்களுக்கும் அரசின் தவறுதான் காரணம்" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

அவர் மேலும், "விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியாது. முதலமைச்சரின் நடவடிக்கைகள் அரசியல் அல்ல, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்தான். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தக் கடமையைத்தான் செய்யும்" என்று தெரிவித்தார்.