அரசியல்

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பிரதமரால் சாத்தியமானது- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பிரதமரால் சாத்தியமானது- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
Tamilisai Soundararajan
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், எதிர்க்கட்சிகளின் அரசியல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

முதலமைச்சர் பயணம் குறித்து தமிழிசை

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்துப் பேசிய தமிழிசை, “முதல்வர் ஸ்டாலின் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்திற்குச் சென்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லத்தை உலக அளவில் ஏலம் எடுத்தபோது, பாரதிய ஜனதா கட்சியால் வாங்கப்பட்டு, ஆவண காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எல்லா தலைவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி மரியாதை அளித்து வருகிறது என்பதை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே” என்று தெரிவித்தார்.

மேலும், ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட தொடர்பாக அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து இன்றுவரை ஒரு வார்த்தைகூட நன்றி சொல்லவில்லை எனக் குற்றம்சாட்டினார். “இவர்களுக்கு மக்களைப் பற்றி சிந்தனை இல்லை, அரசியல் சிந்தனை மட்டுமே உள்ளது” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

'காங்கிரஸ் கூட்டத்துக்கு யாரும் வரவில்லை'

பீகாரில் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டம் நடத்துவதைக் குறிப்பிட்ட தமிழிசை, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வாக்குகள் திருடப்பட்டு வெற்றி பெற்றார்களா என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு குறித்துத் தெரிவித்த பிறகும், தமிழ்நாட்டில் கூட்டம் நடத்துகின்றார்கள். ஆனால், அந்தக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை” என்று கூறினார். மேலும், “காங்கிரஸ் கட்சி 117 இடங்கள் வேண்டும் என கேட்க ஆரம்பித்துள்ளது. உங்கள் கூட்டணியில் குழப்பம் என்று ஸ்டாலினால் கேட்க முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சி.பி.ஆர். வெற்றி: தமிழர்கள் பெருமை

துணை குடியரசுத் தலைவராகப் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு (சி.பி.ஆர்.) திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் ஆதரவு அளிக்காதது குறித்து பேசிய தமிழிசை, "தமிழர் ஒருவர் உயர்வு பெறும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழரின் எண்ணம் அவரோடு இருக்கிறது என்பதைப் பறைசாற்ற வேண்டுமா இல்லையா? தமிழ், தமிழ் என்று பேசுவது அனைத்தும் வெளிவேஷம். தமிழருக்கு ஒரு உயர்வு வரும்போது இவர்கள் பொறுத்துக்கொள்ளாமல், பக்க அரசியல் செய்கிறார்கள். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழைப் பேசுவது வெறும் வேஷம் என்பதை நாளைய தினம் நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்த நம்பிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், “இப்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கின்றன. உட்கட்சி விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. 2026 தேர்தலில் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு வரும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அனைவரும் இணைந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.