அரசியல்

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!
விஜய்யின் அரசியல் ஒரு 'பொய்' அரசியல்! நாகையில் ஷா நவாஸ் சாடல்!
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷா நவாஸ், "தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரிகமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஆனால், விஜய் பொய்களைப் பேசி வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறார்" என்றார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதியாக இருக்கும் நிலையில், அவர்களின் வேலையை விஜய் கையில் எடுத்துள்ளார என்று அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி:

விஜய் நேற்று நாகையில் பேசிய அனைத்துமே பொய் எனக் குறிப்பிட்ட ஷா நவாஸ், "அவர் எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், அடிப்படை புரிதலும் இல்லாமல் வன்மத்தோடு பொய் சொல்லியிருக்கிறார்" என்றார். குறிப்பாக, மின்வெட்டு விவகாரத்தில், "திருச்சியில் அவரது கட்சியின் நிர்வாகிதான் மின் தடை செய்ய வேண்டும் என கோரியிருக்கிறார். ஆனால், அரசு வேண்டுமென்றே மின் தடை செய்ததைப் போலல விஜய் பேசி இருக்கிறார்" என்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினார்.

கூட்டம் குறித்து ஷா நவாஸ் கருத்து:

விஜய்யின் கூட்டங்களுக்கு கூடும் கூட்டம் குறித்துப் பேசிய ஷா நவாஸ், விஜய்க்கு கூடும் கூட்டம் 'குடிக்கிற கூட்டம்', அது 'சினிமா கவர்ச்சிக்கு கூடும் கூட்டம்'தான்" என விமர்சித்தார். மேலும், விஜய் ஒரு நடிகர் என அறிவித்துவிட்டு நாகை மாவட்டத்துக்கு வந்தால், இதைவிட அதிக கூட்டம் வரத்தான் செய்யும்" என்றும் கூறினார்.

துணிச்சலான அரசியல் தலைவருக்கான தகுதி:

விஜய்க்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய ஷா நவாஸ், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதுதான் ஒரு அரசியல் தலைவருக்கான துணிச்சல். அந்தத் தகுதி கூட விஜய் அடையவில்லை என சாடினார்.

அதிமுகவுக்கு ஆபத்து:

திமுகவுக்கும், தவெகவுக்கும் போட்டி என்று விஜய் பேசுவது, அதிமுகவுக்குத்தான் ஆபத்து என்றும் ஷா நவாஸ் தெரிவித்தார். "ஏற்கனவே அதிமுகவில் இருந்த சில பேர் கட்சியை காலி செய்தனர், இப்போது பாஜக அதன் பங்குக்கு அதிமுகவை காலி செய்து வருகிறது என்றார்.

நாகை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்:

திமுக அரசு நாகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகப் பட்டியலிட்ட ஷா நவாஸ், நாகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சுமார் 32 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்பியார் நகர் பகுதியில் 10 கோடி செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்துக்கு நெருக்கடி அளிப்பது பாஜக மத்திய அரசுதான் என்றும் கூறினார்.