அரசியல்

"தவெக தனித்து போட்டியிட்டால் விஜய்யை திமுக முடித்துவிடும்"- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.


2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

திமுக - தவெக-வுக்கு 2-வது இடத்திற்கே போட்டி

"அதிமுக கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாகப் பாதயாத்திரை செல்லும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்கள். களத்தில் அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்வது உறுதி. திமுகவுக்கும், த.வெ.க.வுக்கும் 2-வது இடத்திற்குத்தான் போட்டி" என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மேலும், "அதிகாரம் கண்ணை மறைக்கின்ற திமுக தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமையும். எடப்பாடி பழனிசாமி துருவ நட்சத்திரமாக அரசியல் வானில் ஜொலிப்பார்" என்றும் அவர் தெரிவித்தார்.

‘விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது’

நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு, "விஜய்க்கு என்று ஒரு கூட்டம் கூடுகிறது. ஆனால், அந்தக் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. விஜயகாந்த் தேமுதிக ஆரம்பித்தபோது கூடிய கூட்டம் மிகப்பெரிய கூட்டம். விஜயகாந்துக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். ஆனால், விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய்க்கு கூடும் கூட்டத்தைவிட நடிகர் அஜீத் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும்" என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

"அதிமுகவுடன் கூட்டணிதான் விஜய்க்கு சரியான முடிவு"

விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல, எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை என ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார்.

"விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால், எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்தத் தேர்தலோடு விஜய்யை திமுக முடித்து விடும். விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அவர் அதிமுக கூட்டணிக்குத்தான் வர வேண்டும். அதுதான் அவருக்குச் சரியான முடிவு. விஜய் தனித்து நின்று களம் காண்பேன் என்று கூறுவது திமுகவிற்கு வலி சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு குறித்துப் பேசிய அவர், அது சம்பந்தமான எந்த முடிவையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார் என்றும் கூறினார்.