அரசியல்

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: அதிமுக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15 முதல் தொடக்கம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: அதிமுக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15 முதல் தொடக்கம்!
ADMK
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக விருப்ப மனு விநியோக அறிவிப்பு

சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் தேர்தல் தொடர்பான முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் நாடு சட்டபேரவைப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டபேரவைப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உறுப்பினர்கள், தலைமை அலுவலகத்தில் வருகின்ற டிசம்பர் 15, 2025 (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்க் கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

காங்கிரஸ் & அமமுக விருப்ப மனு விநியோகம்

இதேபோல், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அமமுக மற்றும் காங்கிரஸ் காட்சிகள் ஏற்கனவே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கிவிட்டன.

அமமுக: அமமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரியில் போட்டியிட ரூ.5,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவைப் பெறலாம். விருப்ப மனுவை இன்று முதல் டிசம்பர் 18 வரை பெற்று, ஜனவரி 3-க்குள் அமமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களிடம் இருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மனுக்களை நாளை முதல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அல்லது மாவட்ட அலுவலகங்களில் பெற்று, இறுதி நாளான டிசம்பர் 15 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.