அரசியல்

சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?
சசிகலா அணிக்கு அதிர்ச்சி: தீவிர ஆதரவாளர் வெண்மதி திடீர் விலகல்.. காரணம் என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா ஒரு தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவரது தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க, மூத்த தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த மூவரையும் கட்சியில் இணைப்பதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.

சசிகலா மீதான அதிருப்தி:

இப்படியான அரசியல் சூழலில், சசிகலாவின் நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, திடீரென அவரது அணியிலிருந்து விலகுவதாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதே இதற்கு முக்கியக் காரணம் என்று வெண்மதி கூறியுள்ளார். இந்த அதிருப்தி காரணமாகவே, கடந்த சில மாதங்களாக அவர் சசிகலாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டான வெண்மதி:

நெல்லை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் இணைச் செயலாளராக இருந்த வெண்மதி, சசிகலா செல்லும் இடமெல்லாம் அவருடன் பயணிப்பவர். குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சசிகலாவின் செய்தியாளர் சந்திப்பின்போது, வெண்மதி கொடுத்த முகபாவனைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தச் சந்திப்பில், சசிகலாவின் பேச்சைவிட, வெண்மதியின் ரியாக்ஷன்கள் அதிகம் பேசப்பட்டன.