அரசியல்

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!

"சாத்தான்குளம் வழக்கில் உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு: ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்- கமல்ஹாசன் பரபரப்பு பதிவு!
Kamal Haasan
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது.

நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்?

போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.